Saturday, October 22, 2022

Samacheer Kalvi 10th Tamil Manappada Paguthi (தமிழ் 10 மனப்பாட பகுதி )

 1. அன்னை மொழியே 

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே !

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!


தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

- கனிச்சாறு 


2. முல்லைப்பாட்டு 

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம். 

- நப்பூதனார்



3. காசிக்காண்டம் 

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

ஒழுக்கமும் வழிபடும் பண்பே.

- அதிவீரராம பாண்டியர் 



4. பெருமாள் திருமொழி 

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

- குலசேகராழ்வார் 


5. நீதி வெண்பா

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

- கா.ப.செய்குதம்பிப் பாவலர்

 


6. திருவிளையாடற் புராணம் 

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்

தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா. 

- பரஞ்சோதி முனிவர்


7. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் 

செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்

திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்

கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட

வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை

ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை. 

-குமரகுருபரர்


8. கம்பராமாயணம் 

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையாெனாடும் போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.

- கம்பர்


9. சிலப்பதிகாரம் 

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;


பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்; 

- இளங்கோவடிகள் 


10. காலக்கணிதம் 

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!

- கண்ணதாசன் 


11. தேம்பாவணி 

நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைக ள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே .

- வீரமாமுனிவர்


No comments:

Post a Comment

Samacheer Kalvi English Memory Poems

 Memory Poems 1. 6th Standard 2 . 7th Standard 3. 8th Standard 4. 9th Standard 5. 10th Standard If there was any mistake in the poems please...