Term I
1. எங்கள் தமிழ்
அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது
கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்.
-நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
2. காடு
பச்சை மயில்நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சர வங்கலங்கும் – கிளியே
நரியெலாம் ஊளையிடும்
அதிமது ரத்தழையை
யானைகள் தின்றபடி
புதுநடை போடுமடீ – கிளியே
பூங்குயில் கூவுமடி!
சிங்கம் புலிகரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடீ – கிளியே
இயற்கை விடுதியிலே!
- சுரதா
3. திருக்குறள்
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
- திருவள்ளுவர்
4. புலி தங்கிய குகை
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்
யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே.
- காவற்பெண்டு
Term II
1. கலங்கரை விளக்கம்
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறை.......
- கடியலூர் உருத்திரங் கண்ணனார்
2. அழியாச் செல்வம்
வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செரின்வவ்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற.
- சமண முனிவர்
3. கீரைப்பாத்தியும் குதிரையும்
கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரியாகு மே.
- காளமேகப்புலவர்
4. திருக்குறள்
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
- திருவள்ளுவர்
Term III
1. விருந்தோம்பல்
மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்
ஒன்றாகு முன்றிலோ இல்.
- முன்றுறை அரையனார்
2. புதுமை விளக்கு
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று.
- பொய்கை ஆழ்வார்
3. அறம் என்னும் கதிர்
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.
- முனைப்பாடியார்
4. திருக்குறள்
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
- திருவள்ளுவர்
No comments:
Post a Comment